லிபியாவில் விமான விபத்து: மூவர் உயர்தப்பினர்
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து லிபியாவின் மிஸ்ராதா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிச் சென்ற தனியார் ஜெட் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. ஆயினும், அதிலிருந்த மூவரும் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
செஸ்னா சிட்டேசன் லாட்டிடியூட் ரகத்தைச் சேர்ந்த குறித்த தனியார் விமானம், விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டவேளை கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையை விட்டு விலகியுள்ளது. இதன் காரணமாக விமானத்தில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த விமான நிலைய அவசர தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு, துரிதமாகத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
விபத்து நேர்ந்த வேளையில் விமானத்தில் இரண்டு விமானிகளும் ஒரு விமானப் பணியாளரும் மாத்திரம் பயணித்துள்ளனர். மூவரும் எவ்விதப் பாரிய காயங்களுக்கும் உள்ளாகாமல் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கிய ஊடகங்களின் வழித் தகவல்களின்படி, விபத்துக்குள்ளான இந்தத் தனியார் ஜெட் விமானமானது, துருக்கியின் முன்னணி வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அக்பென் ஹோல்டிங் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான பிரபல தொழிலதிபர் ஹம்தி அகின் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
TC-AKF என்னும் பதிவு இலக்கத்தைக் கொண்டுள்ள இந்த விமானம், செப்டம்பர் 14 ஆம் திகதி அதிகாலை சுமார் 5.45 மணியளவில் இஸ்தான்புல் அதாதுர்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக லிபியா சென்றடைந்த நிலையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான துல்லியமான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.