கவந்திஸ்ஸ யானையின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையை தாமதப்படுத்துவதாக அரசாங்கம் மீது எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
2026 ஒக்டோபர் 16ஆம் திகதி உயிரிழந்த புகழ்பெற்ற கவந்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கும் முன்மொழிவை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (16) சபாநாயகரிடம் கடிதமொன்றைக் கையளித்துள்ளார்.
இந்தத் தாமதமானது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீறும் செயலாக அமைந்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த யானையின் உயிரிழப்புக்கான சூழ்நிலைகள், அதற்குப் பொறுப்பான அதிகாரிகள் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றினார்களா என்பது மற்றும் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டதிலிருந்து நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு மூன்று தடவைகள் கூடியுள்ள போதிலும், இதுவரை எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பின்னர் சமர்ப்பிக்கப்பட்ட ஏனைய முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தத் தாமதம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமொன்றில் எதிர்க்கட்சியினரால் தமது பங்களிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ரீதியிலான தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கும் தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தனது முறைப்பாட்டை நாடாளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவுக்கு அனுப்பி, அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.