கட்டானையில் நாய் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – இருவர் கைது!
இலங்கையின் கட்டானை பகுதியில் அமைந்துள்ள செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்தில், கடந்த ஒக்டோபர் 8ஆம் திகதி நாய் ஒன்று தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அதன் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கட்டானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு, செல்லப்பிராணிகள் பராமரிப்பு நிலையத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட மற்றைய சந்தேகநபர், தங்காலை பகுதியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பராமரிப்பு நிலையத்தின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் அறிவித்திருந்தனர். இதனையடுத்து, இரு சந்தேகநபர்களும் சட்டத்தரணி ஒருவரின் ஊடாக கட்டானை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் கைது செய்யப்பட்டு, கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கட்டானை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சந்தேகநபர்கள் இருவரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான தனிப்பட்ட பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், வழக்கு விசாரணையைத் தொடர்வதற்காக நீதிமன்றம் மற்றுமொரு திகதியையும் நிர்ணயித்துள்ளது.