‘ஓம்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைத்த தனுஷுக்கு சூர்யா நன்றி!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு ஒத்துழைக்கும் வகையில், தனது ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்திவைத்த நடிகர் தனுஷுக்கு சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சீன்’. ழகரம் ஸ்டூடியோஸ் சார்பில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென், ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சூர்யா, தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் இசையமைப்பாளர் தேவா வழங்கிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தனது ரசிகர்களைப் பாராட்டிய அவர், யார் என்ன விமர்சனங்களை முன்வைத்தாலும் அதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அமைதியாக இருக்க வேண்டும் என்ற தனது அறிவுரையை ரசிகர்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
‘சீன்’ திரைப்படம் கொலை, மர்மம் மற்றும் நகைச்சுவை கலந்த படைப்பாக உருவாகியுள்ளதாகத் தெரிவித்த சூர்யா, ரசிகர்கள் திறந்த மனதுடன் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களையும் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இதன்போது நடிகர் தனுஷுக்கு விசேடமாக நன்றி தெரிவித்த சூர்யா, தீபாவளி வெளியீடாக ‘சீன்’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தனது ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைப்பதாக தனுஷ் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார்.
இந்த முடிவுக்காக தனுஷுக்கு இந்த மேடையில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் சூர்யா குறிப்பிட்டார்.
இதேவேளை, ழகரம் ஸ்டூடியோஸ் மற்றும் ஜெய்ஸ்ரீ தாமோதரன் இணைந்து தயாரித்துள்ள ‘சீன்’ திரைப்படத்துக்கு வினீத் அகஸ்டின் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், அஜ்மல் சாபு படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சுஷின் ஷியாம் இசையமைத்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.