ஓமன் அருகே கப்பல் மீது தாக்குதல்: 11 இந்தியர்கள் காயம்
ஓமன் கடற்பரப்புக்கு அருகில் பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த வர்த்தகக் கப்பல் மீது நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், அதில் பணியாற்றிய 11 இந்திய மாலுமிகள் படுகாயமடைந்துள்ளனர். சர்வதேச கடல் வழியில் இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா தனது பலத்த கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது.
'எம்.டி ஆன் பீஸ்' (MT On Peace) என்ற குறித்த வர்த்தகக் கப்பல், ஓமன் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை வழியாகப் பயணித்துக் கொண்டிருந்தபோதே இத்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. ஏவுகணை அல்லது சக்திவாய்ந்த வெடிபொருள் ஒன்றின் மூலமே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விடுத்துள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"ஓமன் அருகே ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பனாமா நாட்டின் கொடியுடன் பயணித்த 'எம்.டி ஆன் பீஸ்' வர்த்தகக் கப்பல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.
குறித்த கப்பலில் மொத்தம் 19 பணியாளர்கள் பயணித்ததுடன், அவர்களில் 17 பேர் இந்தியர்களாவர். இத்தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 12 பணியாளர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஓமன் கடற்படை மற்றும் அதிகாரிகளின் விரைவான உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, தற்போது 'கசாப்' (Khasab) நகரில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பெற்று வருகின்றனர். சரியான நேரத்தில் மீட்ப நடவடிக்கை வழங்கி உதவிய ஓமன் அதிகாரிகளுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய தாக்குதல்கள் இந்தியாவுக்குப் பெருங்கவலையை அளிப்பதாக உள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் பேணும் பொருட்டு, இதுபோன்ற ஆபத்தான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம்.
வர்த்தகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்படும் வன்முறைகள் முற்றுப்பெற வேண்டும். சர்வதேச கடல் வழிகளில் கப்பல் போக்குவரத்தும் வர்த்தக நடவடிக்கைகளும் தடையின்றி இயல்பு நிலைக்குத் திரும்புவது அத்தியாவசியமானது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.