உஸ்பெகிஸ்தானில் இருந்து மத்தளைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்!
உஸ்பெகிஸ்தானைத் தளமாகக் கொண்ட சென்ட்ரம் எயார் (Centrum Air) விமான நிறுவனம், தாஷ்கண்ட் மற்றும் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது.
இதனை துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தப் புதிய விமான சேவையின் ஊடாக இலங்கைக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பு மேலும் விரிவடைவதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
அமைச்சின் தகவல்களின்படி, இலங்கையின் 2026–2027 சுற்றுலாப் பருவம் முழுவதும் வாரத்திற்கு இரண்டு முறை இந்த விமான சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய, ஒவ்வொரு புதன்கிழமையும் சனிக்கிழமையும் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த நேரடி விமான சேவையின் ஆரம்பம் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இலங்கைக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் உதவும் என அமைச்சு தெரிவித்துள்ளது.