ஈரான் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்த ட்ரம்ப்புக்கு நெதன்யாகு அழுத்தம் – டக்கர் கார்ல்சன் பரபரப்பு குற்றச்சாட்டு!
ஈரான் மீது அமெரிக்கா அணுவாயுதத் தாக்குதல் நடத்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக அமெரிக்க அரசியல் விமர்சகர் டக்கர் கார்ல்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் நவம்பர் 7ஆம் திகதிக்குள் ட்ரம்ப் தீர்மானம் ஒன்றை எடுக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பதிவில் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள டக்கர் கார்ல்சன், ஈரானின் மத்திய பகுதியில் அமைந்துள்ள 'பிகாக்ஸ் மலை' (Pickax Mountain) பகுதியில் அணுசக்தி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய உளவுத்துறை நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பகுதியில் சுமார் 300 அடி தடிமனான திடமான கிரானைட் பாறைகளுக்கு அடியில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ளதாகவும், இதனால் அமெரிக்காவின் வழக்கமான ஆயுதங்களைக் கொண்டு அங்குள்ள நிலத்தடி சுரங்கங்களை அழிப்பது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, அணுவாயுதத் தாக்குதலை முன்னெடுக்குமாறு நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், இது தொடர்பில் நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்ததாகக் கூறி, "பிபி (நெதன்யாகு) தினமும் ட்ரம்ப்பைத் தொடர்புகொள்கிறார்" எனவும் கார்ல்சன் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேலில் அண்மையில் வெளியான தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து நெதன்யாகு உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும், ஆட்சியில் நீடிப்பதற்குத் தேவையான நாடாளுமன்ற ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக ட்ரம்ப்பின் தலையீட்டை நாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் மத்திய கட்டளைப் பிரிவின் (CENTCOM) தளபதி பிராட் கூப்பர் ஆகியோர் ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க விரும்புவதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் சிஐஏ பணிப்பாளர் ஜோன் ரட்க்ளிஃப் ஆகியோர் நெதன்யாகுவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானுடனான சமாதான ஒப்பந்தம் தொடர்பில் டோஹாவில் தயாரிக்கப்பட்டு வரும் முன்மொழிவுக்கு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் கார்ல்சன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஈரான் மீதான புதிய தாக்குதலுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஆதரவைப் பெறுவதற்காக நெதன்யாகு செப்டம்பர் 27ஆம் திகதி இரகசியமாக அபுதாபிக்குச் சென்றதாகவும், எனினும் அந்தத் திட்டத்தை எமிரேட்ஸ் அதிகாரிகள் நிராகரித்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்தால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம், சர்வதேச எரிசக்தி விநியோகம் மற்றும் உரச் சந்தை ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்றும் கார்ல்சன் எச்சரித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் 11 பாரிய எண்ணெய்க் கப்பல்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும், இவ்வாறான இடையூறுகள் தொடர்ந்தால் உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பிகாக்ஸ் மலைப் பகுதியில் அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதன் கதிரியக்கப் பாதிப்புகள் பாரசீக வளைகுடா முழுவதும் பரவக்கூடும் என்றும், இதனால் மில்லியன் கணக்கான மக்களின் குடிநீர் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா அணுவாயுதங்களைப் பயன்படுத்துவது சர்வதேச அளவில் ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் எனவும், இதன் விளைவாக ரஷ்யா, உக்ரைன், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வடகொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையில் அணுவாயுத மோதல் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் முதல் அமெரிக்காவின் அணுவாயுதக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தந்திரோபாய அணுவாயுதங்களை முதலில் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் கார்ல்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனினும், இத்தகைய தாக்குதலுக்கு அனுமதி வழங்குவதில் ட்ரம்ப் இன்னமும் தயக்கம் காட்டி வருவதாகவும், ஈரானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்டுவதற்கு ஆதரவாக இருக்கும் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோரின் கருத்துகளுக்கு அவர் செவிசாய்த்து வருவதாகவும் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.
ஈரான் தரப்பில் அரசியல் பதற்றங்கள் அதிகரித்துள்ள போதிலும், அந்நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகவும், எனவே இராஜதந்திர ரீதியிலான உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்பு இன்னமும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, ஈரான் மீது அணுவாயுதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சர்வதேச சமூகம் மௌனம் கலைத்து எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள டக்கர் கார்ல்சன், அவ்வாறான தாக்குதல் உலகளாவிய ரீதியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.
குறிப்பு: இக்கட்டுரையில் இடம்பெறும் அணுவாயுதத் தாக்குதல் தொடர்பான தகவல்கள் டக்கர் கார்ல்சன் முன்வைத்த குற்றச்சாட்டுகளாகும். அவை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் அல்ல.