இஸ்ரேல் விமானத்தில் மோதல்: பயணிகள் உயிரைக் காத்த இந்திய விமானிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இஸ்ரேலிய விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் இடம்பெற்ற மோதலின் போது, சக உதவி விமானியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையிலும், விமானத்திலிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கெப்டன் ஸ்மித் மச்சார் ஒரு 'மாவீரர்' என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
துபாயிலிருந்து டெல் அவீவ் நோக்கிப் பயணித்த பிளைதுபாய் நிறுவனத்தின் எஃப்.இஸட் 1073 (FZ1073) ரக விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 174 பயணிகளுடன் பயணித்த இவ்விமானம், உதவி விமானியின் தாக்குதலைத் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்து, 30 விநாடிகளுக்குள் சுமார் 14,000 அடி உயரம் வரை கீழ்நோக்கிச் சரிந்துள்ளது. எனினும், படுகாயமடைந்த நிலையிலும் கெப்டன் ஸ்மித் மச்சார் விமானத்தைத் திறம்படக் கட்டுப்படுத்தியதோடு, சவூதி அரேபியாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள தபூக் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கினார்.
இச்சம்பவம் குறித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, "கெப்டன் ஸ்மித் மச்சார் ஒரு நிஜ மாவீரர் ஆவார். மிகக் கடுமையான ஆபத்தான கட்டத்திலும், படுகாயமடைந்த நிலையிலும் அவர் காட்டிய அபார தைரியமும், பயணிகளின் உயிர்களைக் காக்க வேண்டும் என்ற உறுதியும் அளப்பரியது. அவரது இந்த வீரச் செயல் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதுடன், ஒரு பெரும் பேரழிவையும் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்திய தேசம் கெப்டன் மச்சார் குறித்துப் பெருமிதம் கொள்கிறது. அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவும் இந்திய விமானிக்குத் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். விமானத்தைக் கீழே வீழ்த்தி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் உதவி விமானியால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலை முறியடித்து, பேரழிவைத் தடுத்ததற்காக அவர் ஸ்மித் மச்சாரை "உண்மையான மாவீரர்" என வர்ணித்துள்ளார்.
விமானத்திலிருந்த ஏனைய பயணிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து தாக்குதல் நடத்திய உதவி விமானியைக் கட்டுப்படுத்தியுள்ளனர். மேலும், அதே விமானத்தில் பயணிகளாகப் பயணித்த பிளைதுபாய் நிறுவனத்தின் வேறு இரு விமானிகளும் இணைந்து விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியுள்ளனர். இச்சம்பவத்தில் காயமடைந்த இரு விமானிகளும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் கெப்டன் ஸ்மித் மச்சார் தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரான உதவி விமானி ஓமன் (Oman) நாட்டைச் சேர்ந்தவர் என்றும், அவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கான தனது அனைத்து விமானச் சேவைகளையும் பிளைதுபாய் நிறுவனம் தற்காலிகமாகப் நிறுத்திவைத்துள்ளது. அத்துடன், தமது நாட்டுக்குள் இயங்கும் அனைத்துப் சர்வதேச விமானங்களின் விமானிகளின் அடையாளங்களையும் தீவிரமாகப் பரிசோதிக்க இஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.