இலங்கை பொலிஸாருக்கு 200 வாகனங்களை வழங்க DIMO நிறுவனம் தெரிவு
இலங்கை பொலிஸாரின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில், 200 இறக்குமதி செய்யப்பட்ட ஒற்றை அறை (Single-Cab) வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026 பெப்ரவரி 23ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வாகனக் கொள்வனவுக்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் நடைமுறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டதாகவும், உள்ளூர் விநியோகஸ்தர்களிடமிருந்து மொத்தம் ஏழு விலைமனுக்கள் கிடைத்ததாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
விலைமனுக்கள் உயர்மட்ட கொள்முதல் குழுவினால் விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டதையடுத்து, தகைமைகளைப் பூர்த்தி செய்த குறைந்த விலைமனுதாரராக Diesel and Motor Engineering PLC (DIMO) நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைய, இலங்கை பொலிஸாருக்காக 200 TATA Yodha Single-Cab Pickup ரக வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
ஒரு வாகனத்தின் விலை பெறுமதி சேர் வரி (VAT) தவிர்த்து 47 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 200 வாகனங்களையும் கொள்வனவு செய்வதற்கான மொத்தச் செலவு பெறுமதி சேர் வரியைத் தவிர்த்து 957 மில்லியன் ரூபாவாகும்.