ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
இலங்கையின் ஐந்து மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRI) தெரிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, கேகாலை, மாத்தளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு அம்பர் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து மாவட்டங்களிலும் மண்சரிவு அபாயம் காணப்படும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக மண்சரிவுகள், மலைச்சரிவுகள் சரிந்து விழுதல், பாறைகள் உருண்டு விழுதல் மற்றும் நிலம் தாழிறங்குதல் போன்ற அனர்த்தங்கள் ஏற்படக்கூடும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
எனவே, மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் சாய்வடைதல் மற்றும் நிலத்திலிருந்து சேறு கலந்த நீர் வெளியேறுதல் போன்ற அபாய அறிகுறிகளைக் கவனிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.