நாடளாவிய மின்தடை: தரமற்ற நிலக்கரியே காரணம் என்ற குற்றச்சாட்டை அரசு நிராகரிப்பு
இலங்கையில் கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதி ஏற்பட்ட நாடளாவிய மின்தடைக்கும், தரமற்ற நிலக்கரியைப் பயன்படுத்தியமைக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது மின் பிறப்பாக்கி அலகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், மின்தடைக்குத் தரமற்ற நிலக்கரி காரணமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனக் குறிப்பிட்டார்.
குறித்த மின் பிறப்பாக்கி அலகு கடந்த ஜூலை 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரை 62 நாட்கள் பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், செப்டம்பர் 4ஆம் திகதி முதல் புதிய சரக்குத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட நிலக்கரியே மின் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
“நிலக்கரியின் தரத்துக்கும் இந்தச் சம்பவத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செப்டம்பர் 4ஆம் திகதி முதல் புதிய சரக்குத் தொகுதியிலிருந்து பெறப்பட்ட நிலக்கரியே பயன்படுத்தப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடளாவிய மின்தடையால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி இழப்புகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், எதிர்க்கட்சிகள் அந்த இழப்புகள் குறித்த கணக்கீடுகளை அடுத்த வாரம் வெளியிடும் எனக் குறிப்பிட்டார்.
“எமது பணி மின்சாரக் கட்டமைப்பை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாளை முதல் வழமைக்குத் திரும்பும் என நம்புவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.