பதுளை சிறைச்சாலையில் கைதிக்கு வழங்கப்பட்ட ஆடைக்குள் ஐஸ் போதைப்பொருள் – பெண் ஒருவர் கைது!
பதுளை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு வழங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட காற்சட்டைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் 130 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை மீட்ட சிறைச்சாலை அதிகாரிகள், பெண் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 19ஆம் திகதி, சிறைச்சாலைக்கு வருகை தருவோரைப் பரிசோதிக்கும் பகுதியில் வழக்கமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதே இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சந்தேகநபரான பெண்ணும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்காகப் பதுளை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.