இலங்கையில் முதன்முறையாக பிரெயில் முறையில் வெளியிடப்படும் சிறுவர் பாதுகாப்புச் சட்டம்!
இலங்கையில் முதன்முறையாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை ஆகியவை பிரெயில் (Braille) எழுத்து முறையில் வெளியிடப்படவுள்ளன.
1998 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைச் சட்டம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றை பார்வைக் குறைபாடுடைய சிறுவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் இந்த முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிகள், பொறுப்புகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைகள் குறித்து பார்வைக் குறைபாடுடைய சிறுவர்கள் நேரடியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
அனைத்துச் சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒவ்வொரு சிறுவருக்கும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான தகவல்களைச் சமமாகப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.