இந்திய – பாகிஸ்தான் போர்க்கப்பல்கள் மோதல்: புதுடெல்லி கடும் எதிர்ப்பு!
வடக்கு அரபிக் கடலில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படையின் முதன்மைப் போர்க்கப்பல் மீது பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. பாகிஸ்தான் தரப்பின் இந்த "ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் தொழில்முறையற்ற செயற்பாடு" காரணமாகவே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகக் கூறி, புதுடெல்லி தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளது.
நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தையடுத்து, புதுடெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் இடைக்காலத் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சு நேரில் அழைத்து தனது கண்டனத்தைத் தெரிவித்ததுடன், உரிய விளக்கத்தையும் கோரியுள்ளது.
1991ஆம் ஆண்டு ஒப்பந்தம் மீறல்
சர்வதேச கடற்பரப்பில் பாகிஸ்தான் கப்பல் அதிக வேகத்துடனும், பாதுகாப்பற்ற முறையிலும் இயக்கபட்டதே இம்மோதலுக்கு முதன்மைக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் இந்தியக் கப்பலுக்கு எவ்வித பெரிய சேதமும் ஏற்படவில்லை.
எனினும், பாகிஸ்தான் கடற்படைக் கப்பலின் இச்செயற்பாடானது, இரு நாடுகளுக்கும் இடையே படை நகர்வுகள் மற்றும் பயிற்சிகள் குறித்த முன்னறிவிப்பு தொடர்பாக 1991ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தின் 10ஆவது பிரிவை நேரடியாக மீறும் செயலாகும் என இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தூதருக்கு உத்தரவு
எதிர்காலத்தில் இத்தகைய ஆபத்தான சம்பவங்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, இரு நாடுகளுக்குமிடையிலான ஒப்பந்த விதிகளை பாகிஸ்தானின் அனைத்து இராணுவப் பிரிவுகளும் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும் என்பதை இஸ்லாமாபாத்திலுள்ள அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பாகிஸ்தான் இடைக்காலத் தூதருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த அதிகாரப்பூர்வ எதிர்ப்பறிக்கையை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சுக்கு உடனடியாகத் தெரியப்படுத்துமாறும் தூதரக அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.