அம்பாறையில் தொடர் வீடுடைப்புத் திருட்டுச் சம்பவங்கள் – நால்வர் கைது!
அம்பாறை, உஹன மற்றும் பண்டாரதுவ பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற தொடர் வீடுடைப்புத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை பிரிவுக்குட்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, அம்பாறை தயாபுர பகுதியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கடந்த நவம்பர் 7ஆம் திகதி 3,050 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, மற்றுமொருவருடன் இணைந்து நீண்டகாலமாகப் பல வீடுகளை உடைத்து பொருட்களைத் திருடியமை தொடர்பான தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனடிப்படையில், திருடப்பட்ட மடிக்கணினி, நான்கு எரிவாயு சிலிண்டர்கள், பாரம்பரிய பித்தளை எண்ணெய் விளக்கு, இரண்டு மின்விசிறிகள் மற்றும் ஒன்பது நெல் மூட்டைகள் உள்ளிட்ட பல பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், திருடப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்த மற்றும் அவற்றைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் மேலும் இரு ஆண்களும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் அம்பாறையின் ராஜவெவ, உதயபுர மற்றும் நவகம்புர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களும் மீட்கப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.