அனர்த்த முகாமைத்துவத் திட்டங்களை மீளாய்வு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு
நாட்டில் நிலவும் அதிக வெப்பமான காலநிலை மற்றும் எதிர்பார்க்கப்படும் கனமழை காரணமாக ஏற்படக்கூடிய சமூகப் பாதிப்புகளை மதிப்பீடு செய்து, அனர்த்த முகாமைத்துவத் தயார்நிலைத் திட்டங்களை வலுப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (16) காலை நடைபெற்ற அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்போது, தற்போதைய வானிலை நிலவரங்கள் குறித்து வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்துள்ளனர்.
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்புகளை மேலும் விரிவாக ஆய்வு செய்து, அவற்றின் காரணமாக மக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தொடர்பான அறிக்கையொன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையின் அடிப்படையில், குடிநீர், மின்சாரம் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகத்தை நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதற்கான தற்போதைய திட்டங்களைப் புதுப்பிக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வனவிலங்குகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை மதிப்பீடு செய்து, அவற்றை எதிர்கொள்வதற்கான நீண்டகால நடவடிக்கைகளை அடையாளம் காண வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர், களப்பணியாளர்களை அழைத்து மேலதிக கலந்துரையாடல்களை நடத்துமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வுபெற்றவர்), பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட (ஓய்வுபெற்றவர்), வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஏ.எல்.கே. விஜேமான்ன மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.