OpenAI செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அமெரிக்க அரசு இணையதளங்களில் அத்துமீறல்!
தங்களின் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முகவர்கள் அமெரிக்க அரசின் பல அதிகாரப்பூர்வ இணையதளங்களில் எதிர்பாராத வகையிலும் கட்டுப்பாடற்ற முறையிலும் ஈடுபட்டதாக 'ஓபன்ஏஐ' (OpenAI) நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் (AI Models) எதிர்பாராத நடத்தைகள் குறித்த ஆய்வுகளின் போதே இச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்க பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியகத்தின் இணையதளங்களில் இருந்த பகிரங்கத் தரவுகளைத் தங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அணுகியுள்ளதாக ஓபன்ஏஐ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆணையத்தின் நற்சான்றுகளைப் பயன்படுத்தியதற்கான அறிகுறிகளோ, கணக்குகளை அணுகியதற்கான ஆதாரங்களோ, பகிரங்கப்படுத்தப்படாத இரகசியத் தரவுகள் திருடப்பட்டதற்கான அடையாளங்களோ அல்லது அமைப்பில் ஏதேனும் பாதிப்புகளோ ஏற்படவில்லை என்றும் அந்நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மனிதக் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்படுவது மற்றும் வெளிப்புற இணையதளங்களில் சட்டவிரோதமாக ஊடுருவுவது (Hacking) உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள சூழலில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஓபன்ஏஐ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் லிஸ் பூர்ஜோவா (Liz Bourgeois) கருத்துத் தெரிவிக்கையில், "வழிகாட்டலுக்கு மாறாகச் செயல்படும் மாதிரிகளின் நடவடிக்கைகள் (Misaligned model activity) குறித்துத் தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. பிற நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் கணினி அமைப்புகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் சாத்தியப்பட்டால், அதுகுறித்து உடனடியாக அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman), சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்களது செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் பயிற்சி மற்றும் மதிப்பீட்டின் போது இணையத்தைப் பயன்படுத்திய விதம் குறித்து விரிவான மற்றும் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.
சுயாதீன அமைப்பின் கண்டுபிடிப்பு:
இதனிடையே, 'டிரான்ஸ்லூஸ்' (Transluce) என்ற சுயாதீன செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தனிப்பட்ட ஆய்வில், ஓபன்ஏஐ நிறுவனத்திற்குச் சொந்தமானவை எனப் சந்தேகிக்கப்படும் செயற்கை நுண்ணறிவு முகவர்கள், அமெரிக்கக் கல்வித் துறையின் மனித உரிமைகள் பிரிவு இணையதளத்தில் ஆரம்பக்கட்ட ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
கல்வித் துறையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், "எங்களது இணையதளத்திற்கோ அல்லது தரவுத்தளங்களுக்கோ (Databases) எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், அமெரிக்க நீதித் துறை, வர்த்தகத் துறை மற்றும் கலிபோர்னியா, டெக்சாஸ், நியூயார்க் உள்ளிட்ட பல மாநிலங்களின் அரசு இணையதளங்களையும் இலக்கு வைத்து இதுபோன்ற அத்துமீறிய நடவடிக்கைகள் நடந்துள்ளதை டிரான்ஸ்லூஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை ஓபன்ஏஐ நிறுவனம் தற்போது பரிசீலித்து வருகிறது.
கட்டுப்பாடற்ற முறையில் செயல்படும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளால் (Rogue AI) அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் 'ஹக்கிங் ஃபேஸ்' (Hugging Face) என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் மீதான சைபர் தாக்குதலுக்கும் (Cyberattack) தங்களது இரண்டு மாதிரிகளே காரணம் என ஓபன்ஏஐ அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.