“முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கு பாடம் புகட்டும் வாய்ப்பே இடைத்தேர்தல்...” - மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
“தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் திமிர்த்தனத்துக்கும் முதல்வர் விஜய்யின் ஆணவத்துக்கும் தக்க பாடம் புகட்டும் வாய்ப்பாகவே மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்கள் அமையும்” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக் காரசாரமாகச் சாடியுள்ளார்.
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் குறிப்பிட்டதாவது:
“ஓர் அரசியல் இயக்கம் 75 ஆண்டுகளைக் கடந்து அதே கம்பீரத்தோடு நிலைத்து நிற்பது சாதாரண சாதனை அல்ல. கொள்கையும் லட்சியமுமே இந்த இயக்கத்தின் மூச்சு. எதிரி யார் என்பதைச் சரியாகக் கணித்துச் செயற்பட்டிருந்தால் கடந்த தேர்தலில் இந்தத் பின்னடைவு ஏற்பட்டிருக்காது. 17 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே நாம் அதிகத் தொகுதிகளை இழக்க நேரிட்டது.
பலவீனமான ஆட்சியும் ஸ்டிக்கர் ஒட்டும் அரசியலும்:
தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்துக்கு (TVK) பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் கூடக் கிடைக்கவில்லை. நமது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடுதான் இந்த ஆட்சியே நடக்கிறது. எனினும், ஏதோ பெரிய அலை அடித்தது போல ஓர் பிம்பத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து மக்கள் நலத்திட்டங்களைச் செய்யாமல், திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்துவதும், அதற்குப் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டுவதுமே இவர்களின் வேலையாக உள்ளது.
‘ஷூட்டிங் மூடில்’ இயங்கும் முதல்வர்:
முதல்வரைப் பொறுத்தவரையில் அவர் எப்போதும் ‘ஷூட்டிங் மூடிலேயே’ (Shooting mode) இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகக் கூறிவிட்டு, இப்போது மக்கள் முன்னிலையில் நடித்துக்கொண்டிருக்கிறார். முதலில் பஞ்ச் டயலாக் , இப்போது வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் என எல்லாமே ரீல்ஸ்தான் . பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை 25 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள்.
திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் மகளிருக்கு உரிமைத் தொகையாக 2,000 ரூபாயும், இல்லத்தரசிகளுக்குக் கூப்பன்களும் கிடைத்திருக்கும். ஆனால் இந்த உதவாக்கரை ஆட்சியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.
அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை அனைத்தையும் திசை திருப்பி , முதலமைச்சரின் உடை, பொட்டு, ஜோசியம் போன்றவையே செய்திகளாக்கப்படுகின்றன. ‘நான் முதல்வன்’, ‘புதுமைப் பெண்’, ‘தமிழ்ப் புதல்வன்’ என சாதனை படைத்த மாநிலத்தில், இன்று கோட்-சூட் விளம்பரங்களே டிரெண்ட் செய்யப்படுகின்றன. இதைப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கிறது.
சட்ட ஒழுங்கு சீர்கேடு:
தவெக ஆட்சியில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்குமே போட்டி நடக்கிறது. பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள், பாலியல் வன்கொடுமைகள் எனத் தமிழ்நாடு குற்றவாளிகளின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையிலும் முதல்வருக்கு அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.
அண்மையில் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்ற முதல்வர், தொழில்துறை அமைச்சரோ அல்லது செயலாளரோ இல்லாமல் சென்றுள்ளார். இந்தியாவில் உள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய எதற்கு லண்டன் போக வேண்டும் என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் மிசா (MISA) மற்றும் சர்க்காரியா கமிஷன் பற்றிப் பேசி திசைதிருப்புகிறார்கள். எனது மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சிறைச்சாலைச் சித்திரவதைகள் குறித்து எம்.ஜி.ஆர். அமைத்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலேயே இதற்கான சான்றுகள் உள்ளன.
திமுக ரியல்; தவெக ரீல்ஸ்!
வாக்களித்த மக்கள் வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால் அவதூறுகளைப் பரப்புகிறார்கள். இவர்கள் கட்சிக்கு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று பெயர் வைப்பதற்குப் பதிலாக ‘தமிழக ரீல்ஸ் கழகம்’ என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். திமுக தந்தது ரியல் ஆட்சி, இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி.
பொதுவாகச் சட்டமன்ற உறுப்பினர் மரணமடைந்தால்தான் இடைத்தேர்தல் வரும். ஆனால், முதல்முறையாக ஜனநாயகம் மரணமடைந்ததால் இந்த இடைத்தேர்தல் வருகிறது. வெற்றிபெற்ற வேட்பாளர்களைக் குதிரை பேரம் மூலம் ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, மீண்டும் அவர்களையே வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
எனவே, இந்தத் திமிர்த்தனத்துக்கும் ஆணவத்துக்கும் பாடம்புகட்ட மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும். அத்துடன், இன்றைய ஜென்-ஸீ (Gen Z) இளைஞர்களைக் கவரும் வகையில் அவர்களின் மொழியிலும், கைப்பேசிகளிலும் நமது கொள்கைகள் சென்று சேரும் வகையில் தொண்டர்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்” என மு.க.ஸ்டாலின் தனது உரையில் வலியுறுத்தினார்.