மீகொட, நொச்சியாகம, வாத்துவயில் கொடூர விபத்துகள்: மூவர் பலி
மீகொட, நொச்சியாகம மற்றும் வாத்துவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற வெவ்வேறான மோட்டார் சைக்கிள் விபத்துகளில் பொலிஸ் கொன்ஸ்டபிள் (Police Constable) ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுவரில் மோதி பொலிஸ் அதிகாரி பலி
மீகொட, லியன்வல பகுதியில் கொடகம–பாதுக்க வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பொரள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் கொன்ஸ்டபிளே உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதகுக் கம்பத்தில் மோதி விபத்து
நொச்சியாகம–குகுல்கட்டுவ வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மதகுக் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் 53 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பின்னால் அமர்ந்து பயணித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முந்திச்செல்ல முயன்றபோது சோகம்
வாத்துவ, பொதுப்பிட்டிய பகுதியில் கொழும்பு–காலி பிரதான வீதியில் இடம்பெற்ற மற்றொரு விபத்தில் வாஸ்கடுவ பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை முந்திச்செல்ல (Overtake) முயன்றபோது, எதிரே வந்த காரொன்றுடனும் மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடனும் மோதி இந்த கொடூர விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவினர் விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.