கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம்: நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டார்!
சர்ச்சைக்குரிய கிரிஷ் (Krrish) நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காம் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு தொடர்பாக, லஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் (CIABOC) விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் ‘கிரிஷ்’ ரியல் எஸ்டேட் நிறுவனத்திடமிருந்து , கொழும்பு கோட்டையிலுள்ள ‘டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்க’ காணியைக் கையகப்படுத்துவதற்கும், அது தொடர்பான அனுமதிப்பத்திரங்களை விரைவாகப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஒத்தாசை புரிந்தமைக்காக, நாமல் ராஜபக்ஷ 70 மில்லியன் ரூபாயை லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின்கீழேயே இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றின் முன்அனுமதியைப் பெற்றிருந்தனர். அதற்கமைய, சிறைச்சாலையில் வைத்து அவரிடம் அண்மையில் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக புலனாய்வு விசாரணைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.