பத்தேகம துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: சந்தேகநபர்கள் மூவர் கைது
பத்தேகம, ஹல்பதோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்த குழுவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டின் கீழ் மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பணியக உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கார் ஒன்றில் வந்த குழுவினர், ஹல்பதோட்டப் பகுதியில் முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபர்களை நோக்கியே இத்துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், பத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேதுருவத்த சந்தை மற்றும் ஹல்பதோட்ட ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவேளையில் அவர்களிடமிருந்து 16.170 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், குற்றச்செயலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
22 மற்றும் 33 வயதுடைய இச்சந்தேகநபர்கள் கஹவத்தை, பள்ளேபெத்த மற்றும் ஹிக்கடுவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வரும் அதேவேளை, பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.