‘டேர் டெவில்’ படப்பிடிப்பில் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கும் அஜித்
நடிகர் அஜித்குமார் நடிப்பில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய திரைப்படமான ‘டேர் டெவில்’ படத்தின் படப்பிடிப்பில் அஜித் குமார் நவம்பர் 12ஆம் தேதி பங்கேற்கவுள்ளார்.
அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்துக்குப் பிறகு, அவர் கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, புதிய திரைப்படத்தின் அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டதுடன், படத்துக்கு ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. பிரேவ்ஹார்ட்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஷாலினி அஜித்குமார் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்க நிகழ்வில், அவர் கிளாப் அடித்து முதல் காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ரீலீலா, இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் பார்த்திபன், உன்னி முகுந்தன், பிரபு, ரெடின் கிங்ஸ்லி, சுனில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் படப்பிடிப்பில் அஜித்குமார் நவம்பர் 12ஆம் தேதி முதல் பங்கேற்கவுள்ளார். இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத், மலேசியா மற்றும் பாங்கொக் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.