சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மின்சார இருசக்கர வாகன வாடகைச் சேவை தொடக்கம்!
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, முதன்முறையாக மின்சார இருசக்கர வாகன (E-Bike) வாடகைச் சேவையைத் தொடருந்து நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பற்ற, நிலையான நகர்ப்புறப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வாடகை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய மையத்தை சென்னை தொடருந்து கோட்டத்தின் கூடுதல் தொடருந்து மேலாளர் ஐ. செந்தில்குமார் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) முறைப்படி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடருந்துத் துறையின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
முதற்கட்டமாக 20 வாகனங்கள் பயன்பாட்டிற்கு
இச்சேவை தொடர்பாக சென்னை தொடருந்து கோட்ட அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்;
"முதற்கட்ட நடவடிக்கையாக இம்மையத்தில் 20 மின்சார இருசக்கர வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நிறுத்தப்பட்டுள்ளன.
தொடருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் பயணிகள், அதிகளவிலான வாகனக் கட்டணங்களை நம்பியிருக்காமல் மிகக் குறைந்த செலவில் தங்களது பயணங்களை மேற்கொள்ள இச்சேவை உறுதியளிக்கிறது. சென்னைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தினசரிப் பணிகளுக்குச் செல்வோர் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு இதுவொரு சிக்கனமான, எளிதான போக்குவரத்துத் தேர்வாக அமையும்" எனக் குறிப்பிட்டனர்.
ஆண்டுக்கு ரூ. 7.17 லட்சம் கூடுதல் வருவாய்
இத்திட்டமானது 3 ஆண்டுகள் கால அளவிலான 'கட்டணமற்ற பிற வருவாய் ஒப்பந்தத்தின்' கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் தொடருந்து நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ரூ. 7.17 லட்சம் வருவாயாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.