காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர் விஜய்!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை' தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (22) முறைப்படி தொடங்கி வைத்தார்.
சென்னை, திருவான்மியூர் காந்திகிராமத்தில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய், மாணவர்களுக்குக் காலை உணவைப் பரிமாறியதுடன், அவர்களுடன் ஒரே வரிசையில் அமர்ந்து உணவருந்தினார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளைப் பார்வையிட்ட முதலமைச்சர், மாணவர்களுடன் சுமுகமாகக் கலந்துரையாடினார். அப்போது, வழங்கப்பட்ட காலை உணவின் தரம் மற்றும் சுவை குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இத்திட்டத்தின் விரிவாக்கத்திற்காக 2026-27 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (Budget) மேலதிகமாக 217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரிவுபடுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வாரத்தின் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான ஊட்டச்சத்துமிக்க காலை உணவு வழங்கப்படவுள்ளது.
அதன்படி, திங்கட்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை கிச்சடி, புதன்கிழமை பொங்கல், வியாழக்கிழமை உப்புமா மற்றும் வெள்ளிக்கிழமை இனிப்பு வகை உணவு ஆகியவற்றை வழங்குவதற்குரிய உணவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் தொடக்க நாளான இன்று, மாணவர்களுக்குச் சூடான வெண் பொங்கல், சாம்பார் மற்றும் சர்க்கரைப் பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.