இலங்கை கடற்றொழில் துறையை நவீனமயமாக்க ரஷ்ய முதலீடு கோரிக்கை
இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடித்தல் துறையை நவீனமயமாக்குவதற்கும், ரஷ்ய சந்தைக்கான கடல்சார் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிப்பதற்கும் ஏதுவாக இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கையும் ரஷ்யாவும் தீர்மானித்துள்ளன.
கடற்றொழில், நீர்வாழ் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியான் ஆகியோருக்கிடையிலான உயர் மட்டக் கலந்துரையாடலொன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றபோதே இத்தேர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, இலங்கை கடல் எல்லைக்குள் பெறப்படும் சூரை (tuna), இறால் (prawns) மற்றும் நண்டு (crabs) உள்ளிட்ட உயர்தர கடல்சார் உற்பத்திகளை ரஷ்ய சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை விரிவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் சந்திரசேகர் விருப்பம் வெளியிட்டார். இதன் போது, ஏற்றுமதி நடவடிக்கைகளை சீராக முன்னெடுப்பதற்குத் தேவையான ரஷ்ய உணவு பாதுகாப்புத் தரநிலைகள், சுகாதார சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் சர்வதேச தரக் கட்டுப்பாட்டுத் தேவைகள் குறித்து இரு தரப்பும் விரிவாக ஆராய்ந்தன.
அத்துடன், நாட்டின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதற்கும், அறுவடைக்குப் பிந்தைய சேதங்களைக் குறைப்பதற்கும் ரஷ்யாவின் மேம்பட்ட தொழில்நுட்பம், நவீன மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
உள்நாட்டு மீன்பிடித் துறைமுகங்களை தரம் உயர்த்துவதற்கும், குளிரூட்டப்பட்ட களஞ்சியக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், கடல்சார் உற்பத்திகளைக் கையாளும் முறைகளை நவீனமயமாக்குவதற்கும் ரஷ்யாவின் முதலீடுகளும் தொழில்நுட்ப உதவிகளும் இன்றியமையாதவை என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தவும், உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், தொழில்நுட்ப ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் ரஷ்யா தயாராக உள்ளதாக தூதுவர் ஜகரியான் இதன்போது உறுதி அளித்தார். மேலும், கடல்வளங்களை நிலையான முறையில் மதிப்பிடுவதற்கு இரு நாடுகளின் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கும், இலங்கை மீனவர்கள் மற்றும் கடற்றொழில் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கும் இரு தரப்பும் இணக்கம் தெரிவித்துள்ளன.