இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் முதல் 5 யூடியூபர்கள் யார்? மாத வருமானம் பல கோடிகளாம்!
யூடியூபில் காணொளிகளைப் பதிவிட்டு அதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் பலர் உள்ளனர். விளம்பரங்கள், மில்லியன் கணக்கான பார்வைகள், ரசிகர்களின் ஆதரவு மற்றும் பிற வர்த்தக வாய்ப்புகள் எனப் பல வழிகளில் யூடியூப் பிரபலங்கள் பெரும் தொகையைச் சம்பாதித்து வருகின்றனர்.
அந்த வகையில், இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் முதல் ஐந்து யூடியூபர்கள் யார்? அவர்களது மாதாந்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்துப் பார்ப்போம்.
1. கௌரவ் சௌத்ரி – Technical Guruji
இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் 'Technical Guruji' சேனலின் உரிமையாளரான கௌரவ் சௌத்ரி. இவரது யூடியூப் சேனலில் சுமார் 23.7 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
தொழில்நுட்பம், புதிய சாதனங்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள் தொடர்பான காணொளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் இவர், விளம்பரங்கள் மூலமாக அதிக வருமானம் ஈட்டி வருகிறார்.
தொழில்நுட்பம் மற்றும் கேட்ஜெட்ஸ் தொடர்பான விளம்பரங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், யூடியூப் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 1 கோடி முதல் 1.5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
2. சௌரவ் ஜோஷி – Sourav Joshi Vlogs
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் சௌரவ் ஜோஷி. இவரது 'Sourav Joshi Vlogs' சேனலில் சுமார் 42.3 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
தினசரி வாழ்க்கை நிகழ்வுகள், குடும்பம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களை மையமாகக் கொண்டு இவர் வெளியிடும் காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன. இவரது பல காணொளிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ளன.
இதன் மூலம் விளம்பர வருவாயாக மாதமொன்றுக்கு சுமார் 80 லட்சம் முதல் 1.2 கோடி ரூபாய் வரை ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
3. துருவ் ரதி – Dhruv Rathee
மூன்றாவது இடத்தில் இருப்பவர் பிரபல யூடியூப் உள்ளடக்க உருவாக்குநரான துருவ் ரதி. இவரது சேனலில் சுமார் 33.3 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
கல்வி, அரசியல், சமூகப் பிரச்சினைகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் தொடர்பான விளக்கக் காணொளிகளை இவர் வெளியிட்டு வருகிறார். இவரது காணொளிகளை இந்தியாவைத் தவிர வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் பார்வையிடுகின்றனர்.
இதனால் விளம்பரங்கள் மூலம் அதிக வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. இவரது மாதாந்த யூடியூப் வருமானம் சுமார் 70 லட்சம் முதல் 1.1 கோடி ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
4. அஜய் நாகர் – CarryMinati
நான்காவது இடத்தில் 'CarryMinati' யூடியூப் சேனலின் உரிமையாளரான அஜய் நாகர் உள்ளார். இவரது சேனலில் சுமார் 45.8 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர்.
மற்றவர்களின் காணொளிகளை நகைச்சுவையாக விமர்சிக்கும் 'ரோஸ்டிங்' காணொளிகள் மூலம் பிரபலமான இவர், கேமிங் தொடர்பான நேரலை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
குறிப்பாக, நேரலை நிகழ்ச்சிகளின்போது ரசிகர்கள் வழங்கும் Super Chats மற்றும் Super Thanks மூலமாகவும் வருமானம் கிடைக்கிறது. யூடியூப் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
5. புவன் பாம் – BB Ki Vines
இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் 'BB Ki Vines' சேனலின் உரிமையாளரான புவன் பாம்.
நகைச்சுவைக் காணொளிகள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், தற்போது காணொளிகளை உருவாக்குவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்கிறார்.
இருப்பினும், ஏற்கனவே வெளியிடப்பட்ட நகைச்சுவைக் காணொளிகள் மற்றும் இணையத் தொடர்கள் தொடர்ந்து பார்வைகளைப் பெற்று வருவதால், அவற்றின் மூலமும் வருமானம் கிடைத்து வருகிறது. யூடியூப் மூலம் மாதமொன்றுக்கு சுமார் 50 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை ஈட்டுவதாக மதிப்பிடப்படுகிறது.
விளம்பரங்களைச் செயல்படுத்தாத சந்தீப் மகேஸ்வரி!
இதற்கிடையில், இந்தியாவின் பிரபல ஊக்கமளிக்கும் பேச்சாளரான சந்தீப் மகேஸ்வரியும் இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கவர்.
இவரது யூடியூப் சேனலில் சுமார் 28.3 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். தொழில், முதலீடு, வாழ்க்கை வழிகாட்டல் மற்றும் ஊக்கமளிக்கும் கருத்துகள் தொடர்பான இவரது காணொளிகள் மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று வருகின்றன.
எனினும், தனது காணொளிகளை மக்கள் எவ்வித விளம்பர இடையூறுகளுமின்றிப் பார்வையிட வேண்டும் என்பதற்காக அவர் தனது சேனலில் விளம்பரங்களைச் செயல்படுத்தாமல் இலவசமாகக் காணொளிகளை வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால், விளம்பரங்களைச் செயல்படுத்தியிருந்தால் இந்தியாவின் அதிக வருமானம் ஈட்டும் யூடியூபர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தைப் பிடித்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்த வருமானத் தொகைகள் இணையத்தில் வெளியாகியுள்ள மதிப்பீடுகளின் அடிப்படையிலான தோராயமான கணிப்புகளாகும். இவை சம்பந்தப்பட்ட யூடியூபர்களால் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட வருமான விபரங்கள் அல்ல.