விமல் வீரவன்சவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை
அனுராதபுரத்தில் கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மக்கள் பேரணியில் தெரிவித்த கருத்துக்கள் மூலம், நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, பொலிஸ் மா அதிபரின் (IGP) வழிகாட்டலின் கீழ் இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட ஏர்பஸ் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் (CIABOC) சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, விமல் வீரவன்சவின் உரை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், சர்ச்சைக்குரிய உரைக் காணொளி அடங்கிய குறுந்தகட்டையும் (CD) அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரலம, இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையின் முடிவிலேயே, விமல் வீரவன்சவின் உரை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படுமா என்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.