அனோஜனின் குடும்பத்தை சந்தித்தார் ரிசாத் பதியுதீன்: சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள இலங்கை நாட்டவரான அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினரை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
கல்முனை, நற்பிட்டிமுனையில் உள்ள அனோஜனின் இல்லத்திற்கு செப்டம்பர் 18ஆம் திகதி விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன், அனோஜனின் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் பேசித் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
இது குறித்து அவரது ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள், இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்தினர் மத்தியிலும் பெரும் கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
எனவே, அனோஜனின் நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவூதி அரேபிய மன்னர் ஆகியோருக்கு அவசர மேன்முறையீடு ஒன்றைச் செய்வதற்காக, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றுதிரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) சபை இந்த விவகாரத்தில் தலையிட்டு, அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவூதி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தான் கேட்டுக்கொள்ளவுள்ளேன்.
இந்தச் சந்திப்பின் போது, அனோஜனின் விடுதலையை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஆதரவை வழங்கும் என எதிர்பார்ப்பதாக குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். அதற்குப் பதிலளித்த ரிசாத் பதியுதீன், அனோஜனின் குடும்பத்தாரின் கவலையில் முஸ்லிம் சமூகமும் பங்கெடுத்துக் கொள்கிறது என்றும், அவரை மீட்கும் முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்போம் என்றும் உறுதியளித்தார்.
மேலும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சாணக்கியன் இராசமாணிக்கம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்துக் கலந்துரையாடியதாகத் தெரிவித்த அவர், அனோஜனின் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து ஒரு குழுவாக முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதேவேளை, அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மரண தண்டனைத் தீர்ப்பு குறித்து இலங்கை வெளிநாட்டமைச்சினால் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.