வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் சேவை வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு பிரதி அமைச்சர் பாராட்டு!
தொழிற்சங்க போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலும், ரயில் சேவைகளை இயன்றளவு தடையின்றி முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போதிலும், கடந்த வியாழக்கிழமை (17) 187 ரயில் பயணங்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வெள்ளிக்கிழமை (18) 'யாழ் தேவி'உள்ளிட்ட யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குப் பங்களித்த ஊழியர்களுக்கும், ஆரம்பத்தில் தொழிற்சங்கப் போராட்டத்தில் இணைந்து பின்னர் மீண்டும் பணிகளுக்குத் திரும்பிய ஊழியர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
பயணிகளின் பாதுகாப்பிற்கு முதன்மை முன்னுரிமை அளித்து சேவைகளைப் பராமரிப்பதற்காகச் சில அதிகாரிகள் சுமார் 24 மணிநேரம் வரை தொடர்ந்து கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிவித்த பிரதி அமைச்சர், வழக்கமாக பெருமளவிலான ஊழியர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் பல முக்கிய நடவடிக்கைகள், இந்த வேலைநிறுத்தக் காலத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு திறம்பட முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
தொழிலாளர்களின் போராட்டத்திற்கு மத்தியிலும் ஊழியர்கள் காட்டிய இந்த அர்ப்பணிப்பானது, பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளைப் பாதுகாப்பதற்கான மிக முக்கிய பங்களிப்பாகும் என வர்ணித்த பிரசன்ன குணசேன, அவர்களின் சேவையை வெகுவாகப் பாராட்டினார்.