ஷேக் அகமது பின் ரஷீத்தின் மறைவுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அனுதாபம்
துபாய் மன்னர் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரான ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூமின் மறைவையடுத்து, துபாய் அரச குடும்பத்தினருக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், ஷேக் அகமதுவின் மறைவுச் செய்தி கேட்டு தாம் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரச குடும்பத்தினருக்கும் துபாய் மக்களுக்கும் தனது மனமார்ந்த அனுதாபங்களைப் பகிர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் இளைய சகோதரரான 76 வயதுடைய ஷேக் அகமது பின் ரஷீத், கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி காலமானார்.
இவரது மறைவையடுத்து துபாயில் 10 நாட்கள் உத்தியோகபூர்வ துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமீரகம் முழுவதும் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வருகின்றன. மறைந்த ஷேக் அகமது, துபாய் பொலிஸ் மற்றும் பொதுப் பாதுகாப்புத் துறையின் துணைத் தலைவராகவும் , அல் வஸ்ல் விளையாட்டு இயக்கத்தின் தலைவராகவும் நீண்டகாலம் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.