வெள்ளக் கட்டுப்பாடு: ரூ. 1.2 பில்லியனில் புதிய இயந்திரங்கள் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் (SLLDC) சிறிய அளவிலான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நகர்ப்புற மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கைக் குறைத்தல், வடிகான்கள் மற்றும் கால்வாய்களைப் பராமரித்தல் மற்றும் வெள்ளப் பெருக்குக் காலங்களில் அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இலங்கை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் முக்கிய பங்காற்றி வருகின்றது.
நகர்ப்புற வெள்ளப் பெருக்கிற்குப் பிரதான காரணியாக அமையும் சிறிய கால்வாய்களைச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காகவே இந்தப் புதிய இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, ரூ. 1,233 மில்லியன் (ரூ. 1.23 பில்லியன்) மதிப்பீட்டுச் செலவில் இந்த இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. இதற்கான நிதியில் ரூ. 625 மில்லியனைப் பொதுத் திறைசேரி சமபங்குப் பங்களிப்பாக வழங்கவுள்ளதுடன், எஞ்சிய தொகை நில அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் சொந்த நிதியிலிருந்து ஒதுக்கப்படவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கே அமைச்சரவை தனது முழுமையான அனுமதியை வழங்கியுள்ளது.