விமான எரிபொருள் திட்ட ஒப்பந்தம் சீன நிறுவனத்திற்கு: அமைச்சரவை ஒப்புதல்
முத்துராஜவேல முனையத்தையும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தையும் (BIA) இணைக்கும் வகையில், புதிய விமானப் போக்குவரத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக அமைப்பை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை சீன பெட்ரோலியக் குழாய் பொறியியல் நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சரவையினால் முதன்முதலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், முத்துராஜவேல பகுதியில் 92,000 கனமீட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் சேமிப்புத் தாங்கி வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அத்துடன், அப்பகுதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் எரிபொருள் நிரப்பும் முனையம் வரை பிரத்யேகமாக எரிபொருள் விநியோகிக்கும் சுரங்கப்பாதை அமைக்கப்படுவதுடன், தற்போதைய முனையத்திலும் தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
சர்வதேச திறந்த ஏலக் கோரல் செயல்முறைக்கு அமைவாகச் சமர்ப்பிக்கப்பட்ட மூன்று ஏலங்களை மதிப்பீடு செய்த உயர்மட்டக் கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு அமையவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வரிகள் நீங்கலாக 40.84 மில்லியன் அமெரிக்க டாலர் (USD) மற்றும் 8,548.75 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில், தகுதிகளை நிறைவு செய்த குறைந்த விலையைக் குறிப்பிட்ட குறித்த சீன நிறுவனத்திற்கு இவ்வொப்பந்தத்தை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
ஆற்றல் அமைச்சரினால் இதற்கான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.