போலி லேபிள் பழச்சாறு விநியோகம்: வத்தளை நபருக்கு ரூ. 42,000 அபராதம்
போலித் தகவல்களைக் கொண்ட லேபிள்களைப் பயன்படுத்திப் பழச்சாறுகளை விநியோகித்தமை உள்ளிட்ட 16 குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட வத்தளையைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 42,000 ரூபாய் தண்டப்பணம் (Fine) விதித்து மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பை வழங்கிய நீதவான், சோதனையின் போது கைப்பற்றப்பட்ட போலி லேபிளிடப்பட்ட பழச்சாறு கையிருப்புகளை முற்றிலும் அழிக்குமாறும் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின்படி, குறித்த நபர் சுமார் ஐந்து வருடங்களாக அதிகாரிகளின் கண்களில் படாமல் தப்பித்து, இந்தச் சிறிய அளவிலான வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட இரகசிய நடவடிக்கையின் மூலமே இவர் கைது செய்யப்பட்டு, இந்தத் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்த நிலையிலேயே, அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.