போதைப்பொருள் பணத்தில் வாங்கிய சொகுசு வாகனம் முடக்கம்!
போதைப் பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோதப் பணத்தைக் கொண்டு கொள்வனவு செய்யப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், சுமார் 35 மில்லியன் ரூபா (Rs. 35 Million) பெறுமதியான டொயோட்டா ரக சொகுசு எஸ்டபிள்யூ (SUV) வாகனமொன்றை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
தனமால்வில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் சொத்துக்களைச் சேர்த்துள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செப்டம்பர் 17 ஆம் திகதி பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வழங்கிய முறைப்பாட்டினைத் தொடர்ந்தே இந்த விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. குறித்த சொகுசு வாகனம் போதைப் பொருள் வியாபாரத்தின் மூலம் பெறப்பட்ட பணத்திலேயே வாங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ், செப்டம்பர் 16 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த முடக்கக் கட்டளையின் மூலம், குறித்த வாகனத்தை அடுத்த 14 நாட்களுக்கு விற்பனை செய்வதோ, வேறு நபருக்குப் பரிமாற்றம் செய்வதோ அல்லது கைமாற்றுவதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது.