சுரேஷ் சல்லேவுக்கு 40 இலட்சம் ரூபாயில் இதயச் சாதனம்: நீதிமன்றில் தகவல்
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லேயின் மருத்துவ நிலைமை தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று (22) அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சல்லே இதய வீக்க நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மருத்துவச் சாதனம் ஒன்று அவரது உடலில் பொறுத்தப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது.
சுரேஷ் சல்லே மற்றும் ஏனைய இரு சந்தேகநபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, ஒன்பது பேர்கொண்ட மருத்துவக் குழுவினால் தயாரிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையின் ஊடாக இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டது.
100 நாட்களுக்கு மேலாக வைத்தியசாலையில் அனுமதி
முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றில் கருத் தெரிவிக்கையில், சுரேஷ் சல்லே கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி முதல் 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
"மருத்துவ அறிக்கையின்படி, சந்தேகநபரின் இதயம் விரிவடைந்துள்ளதுடன் (heart enlarged), நிலமையைக் கட்டுப்படுத்துவதற்காகச் சாதனம் ஒன்று பொறுத்தப்பட்டுள்ளது" என திலீப பீரிஸ் தெரிவித்தார். மேலும், இச்சாதனத்திற்காகப் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து 40 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதவானின் தலையீடும் மன்னிப்புக் கோரலும்
வழக்கு விசாரணையின் போது திலீப பீரிஸ், சுரேஷ் சல்லேவை "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் குற்றவாளி" (perpetrator) எனக் குறிப்பிட்டதை அடுத்து, குறுக்கிட்ட நீதவான் உடனடியாகத் தலையிட்டார்.
"இவர் இன்னும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை, வெறும் சந்தேகநபர் மட்டுமே" என நீதவான் சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கோரித் தனது சமர்ப்பணங்களைத் தொடர்ந்தார்.
சுரேஷ் சல்லேயின் இதயம் மற்றும் மனநிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவரது பல் தொடர்பான சிகிச்சைகள் நிறைவடைந்ததும் அவரை வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியும் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
"அவர் தற்போது சாதாரண வார்டில் உள்ளார். அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்க வரும் 28ஆம் திகதி மருத்துவக் குழுவொன்று கூடவுள்ளது" என்றும், சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு புலனாய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அவரது பாதுகாப்புக்கு முறைப்பாட்டாளர் தரப்பு முழுப் பொறுப்பையும் ஏற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
"நாங்கள் இந்தச் சந்தேகநபரைச் சித்திரவதைக்கு உட்படுத்த விரும்பவில்லை. சட்டத்தின் மூலமே அவருக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க விரும்புகிறோம்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடவுச்சொற்கள் தொடர்பில் குற்றச்சாட்டு
நீதிமன்ற உத்தரவு இருந்தபோதிலும், சுரேஷ் சல்லே தனது மடிக்கணினி (laptop) மற்றும் கைப்பேசிகளின் கடவுச்சொற்களை (passwords) இதுவரை வழங்கவில்லை என்றும், அவை நினைவில் இல்லை என அவர் கூறிவருவதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
சுரேஷ் சல்லே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, மருத்துவ அறிக்கையைத் தாம் இன்னும் முழுமையாகப் படிக்கவில்லை எனக் கூறினார்.
கடவுச்சொற்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தமது கடவுச்சொற்களை மாற்றும் நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சுட்டிக்காட்டினார். இவ்வாறான அதிகாரிகள் நீண்டகாலத்திற்கு கடவுச்சொற்களை நினைவில் வைத்துக்கொள்வதில்லை என்றும், கடவுச்சொற்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குச் சல்லே பதிலளித்துள்ள போதிலும், இதுவரை வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த திலீப பீரிஸ், வைத்தியசாலைக்கு உள்ளேயும் வெளியேயும் பல சந்தர்ப்பங்களில் சல்லேயிடம் புலனாய்வாளர்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும், கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்றே அவர் தொடர்ந்து கூறிவருவதாகவும் தெரிவித்தார். அத்துடன், சல்லே கைது செய்யப்பட்டபோது அவரது வாகனத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, தனது மகளுடையது என அவர் உரிமை கோரியுள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
அரசியல்வாதிகளிடம் வாக்குமூலம் பெற அறிவுறுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய திலீப பீரிஸ், விசாரணைகளை விரைவுபடுத்தும் நோக்கில் அவர்களிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) எழுத்துப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
எனினும், புலனாய்வாளர்கள் தங்களது விசாரணைகளில் முன்னேற்றம் அடையத் தவறியதால், தற்போது அரசியல்வாதிகளின் அறிக்கைகளை நம்பியிருக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ கடுமையாக விமர்சித்தார்.
இருதரப்புச் சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த கோட்டை நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை அக்டோபர் 21ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.