சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மேம்பாட்டிற்கு 336 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு!
வட மாகாண மக்களுக்குப் பண்பானதும் திறம்பட்டதுமான சுகாதார சேவைகளை வழங்கும் புதிய அரசாங்கத்தின் செயற்றிட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் 336 மில்லியன் ரூபாய் செலவில் புதிய அபிவிருத்திப் பணிகள் நாளை (19) காலை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மருந்துக்களஞ்சியக் கட்டிடம் (Drug store) மற்றும் சுகாதார ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதி என்பன அமைக்கப்படவுள்ளன.
வட மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மேற்கொள்ளப்படும் இச்செயற்திட்டங்களின் விவரங்கள் வருமாறு:
மருந்துக்களஞ்சியம் மற்றும் வீடமைப்புத் தொகுதி: 282.52 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் இக்கட்டிடங்களின் பணிகள் வரும் 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவுறுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு: வைத்தியசாலையின் படிக்கட்டுகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைச் சீரமைப்பதற்காக வட மாகாண சபையினால் 53 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 2027ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாளை நடைபெறவுள்ள ஆரம்ப விழா நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மாகாண தலைமைச் செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.