சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மகனை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் தாயார் கோரிக்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான சிவராசா அனோஜன் என்பவரைப் பாதுகாப்பாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடமும் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
முகநூலில் முஹம்மது நபியை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அனோஜனுக்கு சவூதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் இராஜதந்திர உதவிகளை வழங்க இலங்கை அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அவருக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதேவேளையில், சவூதி அரேபிய அரசாங்கத்திடம் பொதுமன்னிப்பு கோருவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
முன்னதாக இந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ , அனோஜனின் குடும்பத்தாருடன் கலந்துரையாடி மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், மன்னரின் பொதுமன்னிப்பு அல்லது தண்டனையைக் குறைத்தல் உள்ளிட்ட இராஜதந்திர வழிகளையும் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.