ஊழல் குற்றச்சாட்டு: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ரேணுக பெரேரா விளக்கமறியலில் வைப்பு
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) சிரேஷ்ட உறுப்பினருமான ரேணுக பெரேராவை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ரேணுக பெரேரா, கொழும்பு முதன்மை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பிலான சட்டத்தரணிகள் ஆகியோர் முன்வைத்த சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதவான், இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து சேவைகளை முன்னெடுப்பதற்காக, நடைமுறை விதிகளை மீறி 56 பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அமைச்சரவையின் எவ்வித அனுமதியும் இன்றி வழங்கப்பட்ட இந்த அனுமதிப்பத்திரங்களில், 30 அனுமதிப்பத்திரங்கள் அவரது குழுவிற்கும், எஞ்சிய 26 அனுமதிப்பத்திரங்கள் அவரது தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கும் முறைகேடாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்ச மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.