உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 15 பேருக்கு தலா 200 ஆண்டுகளுக்கும் அதிகமான கடுங்காவல் சிறை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 15 பேருக்கு தலா 200 ஆண்டுகள் முதல் 260 ஆண்டுகள் வரையிலான நீண்டகால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத் த்ரிபுலத்தால் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், கொழும்பு நிரந்தர மேல்நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. இதற்கமைய, தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு தலா 200 ஆண்டுகள் வீதமும், மேலும் ஐந்து பேருக்கு தலா 220 ஆண்டுகள் வீதமும் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நான்கு குற்றவாளிகளுக்கு தலா 240 ஆண்டுகள் வீதமும், ஒரு குற்றவாளிக்கு 260 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், தண்டனை விதிக்கப்பட்ட 15 குற்றவாளிகளினதும் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் அனைத்தையும், அவர்களின் தண்டனைக் காலம் தொடங்கும் நாளிலிருந்து அரசாங்கப் பொறுப்பில் எடுப்பதற்கு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.