இஸ்ரேலின் கட்டுமானப் பணிகளுக்காக 133 இலங்கைத் தொழிலாளர்கள் நாளை பயணம்
இஸ்ரேலின் கட்டுமானத் துறையில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 133 இலங்கைத் தொழிலாளர்கள் நாளை (செப்டெம்பர் 23) அந்நாட்டிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் பணிபுரிவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் விமானப் பயணச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு, கடந்த செப்டெம்பர் 14 ஆம் திகதி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு பணியகத்தின் தலைவர் கோஷல விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, கட்டுமானத் துறைப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 133 தொழிலாளர்களுக்கும், உள்கட்டமைப்புத் துறைப் பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 17 தொழிலாளர்களுக்கும் விமானப் பயணச்சீட்டுகள் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.