அனோஜன் விடுதலை: கட்சித் தலைவர்களின் கூட்டுக் கோரிக்கைக்கு கஜேந்திரகுமார் வலியுறுத்து
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, இலங்கைப் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து கூட்டுக்கோரிக்கையொன்றை முன்வைக்க வேண்டும் என ஆலோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் இலங்கைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமையை அவரது குடும்பத்தினர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையைத் தொடர்ந்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (TNPF) தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான (MP) கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு கலந்துரையாடிய போதே இந்த ஆலோசனையை சமர்ப்பித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
"அமைச்சர் விஜித்த ஹேரத்துடன் அனோஜனின் விடயம் குறித்துப் பேசியபோது, அவரது விடுதலையை உறுதிசெய்வதற்காக அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அத்துடன், இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே தாமதமின்றி நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டுமாறு கேட்டுக் கொண்டேன். அக்கூட்டத்தில் அனோஜனின் விடுதலைக்காக ஏகோபித்த தீர்மானமொன்றை நிறைவேற்றி, அதனைச் சவூதி அரேபிய அரசாங்கத்திற்குத் தூதுவராலயம் ஊடாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் யோசனை முன்வைத்தேன்.
மேலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து நற்செயற்பாடுகளுக்கும் எவ்வித தாமதமுமின்றி முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம் என்பதையும் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினேன்" எனக் குறிப்பிட்டார்.