நிலவு ஆராய்ச்சியில் புதிய புரட்சி: ஐபிஎம் - நாசா இணைந்து சக்திவாய்ந்த ஏஐ மாதிரி அறிமுகம்!
நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் பனிக்கட்டி படிவுகள் மற்றும் விண்கல் பள்ளங்களை மிகத் துல்லியமாகக் கண்டறிந்து வரைபடமாக்க உதவும் புதிய திறந்த மூலச் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை ஐபிஎம் (IBM) நிறுவனம் மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா (NASA) ஆகியவை இணைந்து வியாழக்கிழமை வெளியிட்டுள்ளன.
நிலவில் மனிதர்களின் நீண்டகால நிலையான வருகைக்கான (sustained human presence) திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும், கடந்த பல தசாப்தங்களாகத் திரட்டப்பட்ட விண்வெளித் தரவுகளை விண்வெளி ஆய்வாளர்கள் விரைவாக பகுப்பாய்வு செய்ய உதவவும் இந்த 'நாசா-ஐபிஎம் லூனார் பவுண்டேஷன் மாடல்' உருவாக்கப்பட்டுள்ளது.
லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டர் உட்பட நாசாவின் நான்கு முக்கிய விண்வெளிப் பயணங்கள் மூலம் ஒன்பது கருவிகளைக் கொண்டு சேகரிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட தரவு அடுக்குகளைப் பயன்படுத்தி இந்த ஏஐ மாதிரிக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. புவிசார் மற்றும் வானிலை பயன்பாடுகளுக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஐபிஎம்-நாசாவின் 'பிரித்வி' (Prithvi) திறந்த மூல மாதிரிகளின் தொடர்ச்சியாகவே இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நிலவின் எப்போதும் நிழல் நிறைந்த துருவப் பகுதிகளில் காணப்படம் நீர் பனிக்கட்டி படிவுகளை அடையாளம் காணவும், பாதுகாப்பான விண்கலப் தரையிறக்கப் பகுதிகளைத் தேர்ந்தெடுக்க விண்கல் பள்ளங்களைக் கண்டறியவும், எரிமலை அம்சங்களை ஆராயவும் இது பெருமளவில் உதவும். பாரம்பரியமாக, விண்வெளி விஞ்ஞானிகள் வரைபடங்கள் கைமுறையாகவோ அல்லது குறைந்த தெளிவுத்திறன் கொண்ட இயந்திரக் கற்றல் கருவிகளைக் கொண்டோ பகுப்பாய்வு செய்து வந்த நிலையில், இந்த புதிய ஏஐ தொழில்நுட்பம் அந்தச் சவாலை எளிதாக்கியுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஏனைய முறைகளை விட, நிலவின் முக்கிய அம்சங்களை அடையாளம் காண்பதில் இந்த புதிய ஏஐ மாதிரி 23 சதவீதம் வரை கூடுதல் துல்லியத்தன்மையைக் கொண்டுள்ளதாக ஒப்பீட்டுப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாசாவும் ஐபிஎம் நிறுவனமும் தெரிவித்துள்ளன.